மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையத்தில், 24 மணி நேரமும் செயல்படும் கரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனை செய்யப்பட்ட 13 நிமிடங்களுக்குள் பரிசோதனை முடிவுகளை இந்த மையம் தெரிவிக்கிறது. இதற்கான கட்டணமாக நபர் ஒருவருக்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் பெறப்படுகிறது.
இந்த பரிசோதனை மையமானது கடந்த 15ஆம் தேதி முதல் செயல்பட தொடங்கிய நிலையில், நாளொன்றுக்கு 30-35 பேர் வரை பரிசோதனை செய்துகொள்ள வருவதாக, விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்றுவரை (டிச.28) 400 எக்ஸ்பிரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெகு விரைவில் கிடைக்கப்பெறும் இந்த பரிசோதனை முடிவுகள் மிக துல்லியமாக இருக்கும் எனவும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.