புது டெல்லி : முல்லைப் பெரியாறு அணையின் கீழ்பகுதியில் புதிய அணை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று கேரளா பிரச்சினை எழுப்பியுள்ளது. மேலும் அணையின் நீர்மட்டத்தையும் 142 அடியில் இருந்து 140 அடியாக குறைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெரியாற்றில் 1895ஆம் ஆண்டு முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டது. இந்த முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாடு, கேரளம் இடையே இன்னமும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்த நிலையில் அணையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி கேரளா அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், “அணைக்கு எந்தவொரு புத்துயிரும் அளிக்க முடியாது. ஒரு அணையை இத்தனை ஆண்டுகள் தான் சேவையில் வைத்திருக்க முடியும் என கால வரம்பு உள்ளது. மேலும் அணையின் நீர்மட்டத்தையும் 142 அடியிலிருந்து 140 அடியாக இரண்டு அடி குறைக்க வேண்டும்” எனக் கோரியுள்ளது.