மும்பை :2023 ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்களின் தரவரிசைப் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. டாப் 10 இடங்களில் இந்தியாவின் முகேஷ் அம்பானி மீண்டும் 9வது இடத்தை பிடித்து உள்ளார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 83 புள்ளி 4 பில்லியன் அமெரிக்க டாலர் என போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் கடந்த ஆண்டை காட்டிலும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 2022 ஆம் ஆண்டு 90 புள்ளி 7 பில்லியன் அமெரிக்க டாலருடன் முகேஷ் அம்பானி 10 வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மெர், கூகுளின் லேரி பேஜ்ட், செர்ஜே பிரின், பேஸ்புக்கின் மார்க் ஷக்கர்பெர்க், டெல் டெக்னால்ஜிஸ் மைக்கேல் ஆகியோரை விட முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு அதிகம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் ஹிண்டன்பெர்க் சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமான இந்தியாவின் மற்றொரு பெரும் தொழிலதிபர் கவுதம் அதானி, உலக பணக்காரர்களின் பட்டியலில் உள்ள இரண்டாவது இந்தியர் என்ற சிறப்பை பெற்றார். உலக பணக்காரர்கள் வரிசையில் அவருக்கு 24வது இடம் வழங்கப்பட்டு உள்ளது. அவரது சொத்து மதிப்பு 47 புள்ளி 2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக கணக்கிடப்பட்டு உள்ளது.
உலக பணக்காரர்கள் வரிசையில் 3 வது இந்தியர் என்ற சிறப்பை தமிழிகத்தை சேர்ந்தவரும் எச்.சி.எல் நிறுவனருமான சிவ் நாடார் பெற்றார். உலக அளவில் அவர் 55வது இடத்தை பிடித்து உள்ளார். அவரது சொத்து மதிப்பு 25 புள்ளி 6 பில்லியன் என கணக்கிடப்பட்டு உள்ளது.