டெல்லி: தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, திமுகவுக்கு நான்கு இடங்களும், அதிமுக இரண்டு இடங்களுக்கும் மாநிலங்களவையில் கிடைத்தன. அதில், திமுக ஒரு இடத்தை தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது.
இதையடுத்து, திமுக சார்பில் கிரிராஜன், எஸ். கல்யாணசுந்தரம், கேஆர்என் ராஜேஷ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள். காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தேர்வுசெய்யப்பட்டார். மேலும், அதிமுக சார்பில் சி.வி. சண்முகம், தர்மர் ஆகியோர் தேர்வானார்கள்.
இந்த சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 18) தொடங்கி வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு முன்னிலையில் இன்று பதவி பிரமாணம் ஏற்றுக்கொண்டனர்.
மாநிலங்களவையில் தமிழில் பதவியேற்ற ப.சிதம்பரம், சி.வி.சண்முகம் இதில், தமிழ்நாட்டில் இருந்து தேர்வான ப.சிதம்பரம், சி.வி. சண்முகம், கிரிராஜன், எஸ். கல்யாணசுந்தரம், கேஆர்என் ராஜேஷ்குமார் ஆகியோரும் பதவி பிரமாணம் ஏற்றுக்கொண்டனர். ஆம் ஆத்மி சார்பில் பஞ்சாபில் இருந்து தேர்வான ஓய்வுபெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் பதவியேற்றார். அனைவரும் பதவியேற்றுக்கொண்ட பிறகு, இன்று முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இருந்து தேர்வான அதிமுக உறுப்பினர் தர்மர் கடந்த ஜூலை 8ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மழைக்கால கூட்டத்தொடர்: திறந்த மனதுடன் விவாதிக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்