போபால் : மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் ஊழல் செய்து இருப்பதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் கட்சி ஒட்டியுள்ள போஸ்டர்களில் தங்களது லோகோ முறைகேடாக பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் போன் பே நிறுவனம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரசும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன. இரு கட்சிகளும் எதிர்தரப்பின் முக்கியத் தலைவர்களின் படங்களை பயன்படுத்தி விமர்சிக்கும் வகையில் போஸ்டர்களை ஒட்டி வருகிறது.
அந்த வகையில், மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி, அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சவுகான் ஊழல் செய்திருப்பதாக குற்றம்சாட்டி, மாநிலம் முழுவதும் அவரது படத்தை போன்பே விளம்பரத்துடன் இணைத்து போஸ்டர் ஒட்டி உள்ளது. இந்த போஸ்டர்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி கண்டனத்துக்கு உள்ளாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சி ஒட்டி உள்ள போஸ்டரில், ஆன்லைனில் பணம் செலுத்த பயன்படுத்தப்படும் க்யூஆர் கோடில் முதலமைச்சர் சிவராஜ் சவுகானின் படம் இடம் பெற்று உள்ளது. மேலும் அதன் மேலே போன் பே என்று தெளிவாக எழுதப்பட்டு உள்ளது. மேலும் அதில் இங்கே 50 சதவீதம் கமிஷன் செலுத்தி உங்களது வேலையை முடித்துக் கொள்ளுங்கள் என்றும் எழுதப்பட்டு உள்ளது.
இதுகுறித்து டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நிறுவனமான போன் பே தனது கண்டனத்தை தெரிவித்து உள்ளது. போன் பே நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "எந்த ஓர் அரசியல் கட்சியோ அல்லது அரசியல் சாராத மூன்றாவது நபர்களோ யாரும் எங்களது லோகோவை அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தக் கூடாது.
போன் பே லோகோ எங்கள் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வணிக முத்திரையாகும். போன் பேயின் அறிவுசார் சொத்து உரிமைகளை அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் நிறுவனத்தின் பிராண்ட் மற்றும் லோகோவுடன் இருக்கும் போஸ்டர்களை நீக்கும்படி மத்தியப் பிரதேச காங்கிரசை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க :பிரதமர் மோடியா - ராகுல் காந்தியா... மக்களே தீர்மானிப்பார்கள் - அமித் ஷா!