போபால்: மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பழங்குடியின இளைஞர் ஒருவர் மீது பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. படிக்கட்டில் கீழே அமர்ந்திருந்த இளைஞர் மீது, சிகரெட் புகைத்தபடி பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மனிதாபிமானமற்ற செயலைச் செய்த பாஜக பிரமுகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதனையடுத்து, பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லாவை கடந்த 5ஆம் தேதி காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், பிரவேஷ் சுக்லா மீது எஸ்சி - எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாஜகவை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், நேற்று (ஜூலை 6) பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரிடம் மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மன்னிப்பு கேட்டார். அதோடு, பாதிக்கப்பட்ட நபரை ஒரு நாற்காலியில் அமர வைத்து, அவரது பாதங்களைக் கழுவி பூஜை செய்தார்.
இது தொடர்பான வீடியோவையும் முதலமைச்சர் சவுகான் பகிர்ந்திருந்தார். பாதிக்கப்பட்டவருக்கு மரியாதை கொடுக்கும் வகையில் இதனை செய்ததாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், மத்தியப்பிரதேசத்திற்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வரவிருப்பதால், தேர்தலை கருத்தில் கொண்டே சிவராஜ் சிங் சவுகான் இந்த செயலை செய்திருக்கிறார் என்றும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞருக்கு அம்மாநில அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவுறுத்தலின்படி, பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞருக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையும், வீடு கட்டுவதற்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளதாக சித்தி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பழங்குடி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: பாதிக்கப்பட்டவரின் கால்களைக் கழுவி கவுரவித்த ம.பி. முதலமைச்சர்!