மத்திய பிரதேசம்:கற்க வயது தடையில்லை என்னும் வாசகத்திற்கு ஏற்ப வாழ்ந்து வருகிறார் மத்திய பிரதேசம் மாநிலம், பிலாவலி கிராமத்தைச் சேர்ந்த 90 வயது மூதாட்டியான ரேஷாம் பாய்.
இவருக்கு வாகனம் ஓட்டுவதில் ஆர்வம் அதிகம் இருந்துள்ளது. இதனால் மூன்றே மாதத்தில் வாகனம் ஓட்ட கற்றுக்கொண்ட ரேஷாம் பாய், தற்போது சிறப்பாக வாகனம் ஓட்டி வருகிறார்.
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி
இவர் கார் ஓட்டும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவால், 90 வயது மூதாட்டி ஒரே இரவில் பிரபலமாகிவிட்டார்.
தனது மகள் மற்றும் மருமகள்கள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வாகனம் ஓட்டுவதை கண்டு, இவருக்கும் வாகனம் ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது.
ஆரம்பத்தில், தனது பேத்தி காரை ஓட்டிச் செல்வதைப் பார்த்த ரேஷாம் பாய், தனது மகன்களிடம், அவரது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், அவருடைய வயதைப் பற்றி கவலைப்பட்ட அவரது மகன்கள் தயங்கினர். மேலும், அவர் காரை ஓட்டக்கூடாது என்றும் விளக்கியுள்ளனர்.
கார் ஓட்டி அசத்திய பாட்டி எனினும் சோர்வடையாத ரேஷாம் பாய், தனது இளைய மகனின் உதவியுடன் வாகனம் ஓட்டக் கற்றுக்கொண்டார். இவருக்கு ஸ்மார்ட்போன்கள் மீதும், மின்னணு கேஜெட்டுகள் மீதும் அதிக விருபம் உள்ளது என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
100 கி.மீ வேகத்தில் ஓட்ட முடியும்
இது குறித்து ரேஷாம் பாய் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டிராக்டரை ஓட்டியுள்ளேன். என்னால் 100 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் ஒரு காரை ஓட்ட முடியும்.
நான் கார் ஓட்டுவதற்கு எனக்கு உதவியது என் இளைய மகன் சுரேஷ். ஒரு மாருதி 800 காரை வைத்து கற்றுக்கொடுத்தார். என்னுடைய இந்த விருப்பத்தை நிறைவேற்றினார். இப்போது நான் உரிமத்திற்கும் விண்ணப்பித்துள்ளேன்” என்றார்.
90 வயதிலும் உழைப்பு
இந்த வயதிலும் வாகனம் ஓட்டும் 90 வயது மூதாட்டியின் திறமையைக் கண்டு மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவ்ஹான், அவரை பாராட்டியுள்ளார். இதையடுத்து இம்மூதாட்டி அனைவருக்கும் முன்மாதிரியாக இருப்பார் எனவும் கூறினார்.
இது குறித்து சிவராஜ் சிங் சவ்ஹான் தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் ஆர்வத்தை நிறைவேற்ற வயது வரம்பு இல்லை என்று பாட்டி நம் அனைவரையும் ஊக்கப்படுத்தியுள்ளார்" என குறிப்பிட்டிருந்தார்.
ரேஷாம் பாய்க்கு 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. தற்போது அவர் பாட்டி, தாய் மற்றும் மாமியார் பொறுப்பை கையாளுகிறார். வயதான பிறகும், அவர் தன் எல்லா வேலைகளையும் தானே செய்து வருகிறார். ஏன் விவசாயம் கூட செய்கிறார். அவரது விடா முயற்சி பலருக்கும் உத்வேகமாக இருக்கும்.
இதையும் படிங்க: அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ள இந்திய கப்பற்படையின் கப்பல்