சித்தி (மத்தியப் பிரதேசம்): மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண், தனது ஆசைகளை நிறைவேற்றித் தர வேண்டி காளி தேவிக்கு நாக்கை அறுத்து காணிக்கை செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிஹாவால் சட்டப்பேரவைத்தொகுதிக்கு உட்பட்ட காளி தேவி கோயிலுக்கு இளம்பெண், தனது தாய், தந்தையுடன் நேற்று (ஜூன் 23) சென்றுள்ளார். அங்கு பெற்றோர் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்த வேளையில், இளம்பெண் தனது ஆசைகளை காளி தேவி நிறைவேற்றித்தர வேண்டும் என்று வேண்டி, தனது நாக்கை அறுத்து காணிக்கையாக செலுத்தியுள்ளார்.
இதைக் கண்ட தாய் கதறி அழுது, உதவிக்கு அழைத்துள்ளார். பின் அங்கிருந்தவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அமிலியா காவல் நிலையப்பொறுப்பாளர் கேதார் பரூஹா மற்றும் மருத்துவர் ஸ்வதந்த்ரா படேல் இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளித்தனர்.
மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும்:பின்னர் மருத்துவர் ஸ்வதந்த்ரா கூறுகையில், "இளம்பெண் அபாய கட்டத்தை தாண்டிவிட்டாள். உயிருக்கு ஆபத்தில்லை. இதுபோன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது. உயிருக்கு ஆபத்தானவை. மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும். மூடநம்பிக்கைகள், கட்டுக்கதைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் கிராம மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் யாரும் இதுபோன்ற செயல்களை செய்யக்கூடாது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி வாட்ஸ் அப் கணக்கு மூலம் மோசடியில் ஈடுபட முயற்சி