பர்த்வான்: மேற்குவங்க மாநிலம், பர்த்வான் மாவட்டத்தில் காட்ஷிலா கிராமத்தைச் சேர்ந்தவர், ஆயிஷா பேகம். அங்கன்வாடி ஊழியரான ஆயிஷா பேகத்தின் கணவர் ஒரு விவசாயி. இவருக்கு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். மூத்த மகள் ஃபிர்தௌசி எம்ஏ வரை படித்தார். ஆனால், மகன் பர்வேஸ் ஆலம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார்.
படிப்பின் முக்கியத்துவத்தை அறிந்த ஆயிஷாவின் மகள் ஃபிர்தௌசி, தனது தாயையும், சகோதரனையும் படிக்கும்படி அறிவுறுத்தினார். அவரது ஊக்கத்தால் இருவரும், காட்ஷிலாவில் உள்ள சித்திக் உயர்நிலை மதரஸா பள்ளியில் சேர்ந்தனர். பின்னர் தாய் - மகன் இருவரும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தீவிரமாகத் தயாராகினர்.
கடந்த சில நாட்களாக மேற்குவங்கத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதில், ஆயிஷா பேகமும், அவரது மகனும் தேர்வு எழுதி வருகின்றனர். மெமரி உயர்நிலை மதரஸாவில் இவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். இவர்களுக்கு பொதுமக்கள், ஆசிரியர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.