ஐதராபாத் : மேல் படிப்பிற்காக அமெரிக்கா சென்ற தனது மகளின் உடைமைகள் திருடப்பட்டு, பசியின் கொடுமையால் வீதிகளில் தங்கி இருக்கும் அவரை மீட்டுத் தரக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த தாய் கடிதம் எழுதி உள்ளார்.
ஐதராபாத்தை சேர்ந்த 37 வயது பெண், சைதா லுலு மின்ஹஜ் சைதி முதுகலை படிக்க அமெரிக்காவின் சிகாகோ சென்ற நிலையில், அவரது பொருட்களை மர்ம நபர்கள் திருடியதாக கூறப்படுகிறது. உடைமைகளை இழந்து நிர்கதியான சைதா, சாலைகளில் வசிக்கத் தொடங்கி உள்ளார். பாதசாரிகளிடம் உணவு வாங்கியும், சில நேரங்களில் அதுவும் இல்லாமல் பட்டினியாகவும் அவர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் சைதா தொடர்பான வீடியோ சமுக வலைதளங்களில் வெளியானது. ஒருவர் சைதாவிடம் இந்தியில் பெயரை கேட்கும் போது அவர் ஆழ்ந்து சிந்தித்து பதில் கூறுவது போன்றும் சொந்த நாட்டிற்கு மீண்டும் செல்ல விருப்பமா என்று அந்த நபர் கேட்ட போது அதற்கு சைதா தன் பையில் இருந்து உணவுகளை தேடுவது போன்றும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா சென்ற மகள், வீதிகளில் தஞ்சமடைந்து உணவுக்காக போராடி வருவதை அறிந்த சைதாவின் தாயார் பாத்திமா, தனது மகளை மீட்டு மீண்டும் ஐதராபாத்திற்கு கொண்டு வர உதவுமாறு மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதி உள்ளார்.