பெங்களூரு: கர்நாடகா மாநிலம், பெங்களூருவில், மத நல்லிணக்கத்தை வளர்க்கும் நோக்கில், காத்ரியா மசூதியில் 'மஸ்ஜித் தரிசனம்' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு சமூக நல அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றன. நாளை மாலை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமியர் அல்லாத பிற மதத்தினர் கலந்துகொள்ளலாம்.
இஸ்லாமியர் அல்லாத பிற மதத்தினரிடையே உள்ள மசூதி குறித்த தவறான புரிதலை நீக்கவும், மத நல்லிணக்கத்தை அதிகரிப்பதற்காகவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாக காத்ரியா மசூதி அறங்காவலர் குழு செயலாளர் உஸ்மான் ஷெரீப் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "மசூதிகள் குறித்து பல தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. இதனால் இந்து மற்றும் பிற மத சகோதரர்கள் மத்தியில் இஸ்லாம் மற்றும் மசூதிகள் குறித்து தவறான புரிதல்கள் உருவாகி வருகிறது. அவற்றைப்போக்கும் வகையில் இந்த முயற்சியை செய்கிறோம். பிற மதத்தினரையும் வரவழைத்து மசூதியை சுற்றிக் காட்டவுள்ளோம்.
ஆஜான் முதல் நமாஸ் வரை இங்கு எப்படி, ஏன் வழிபாடு நடத்தப்படுகிறது என்பதை இஸ்லாமியர் அல்லாத சகோதரர்கள் புரிந்துகொள்ள முடியும். நவம்பர் 5ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மஸ்ஜித் தரிசன நிகழ்ச்சி நடைபெறும். இதில் இஸ்லாமியர் அல்லாத சகோதரர்கள் அஸர், மக்ரிப் மற்றும் இஷா ஆகிய 3 தொழுகைகளை கடைபிடிக்க முடியும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: மோர்பி பாலம் இடிந்த வழக்கு - நகராட்சி நிர்வாகத்தலைமை அலுவலர் சஸ்பெண்ட்!