மொரிந்தா : பஞ்சாப்பில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். மொரிந்தா குருத்வாரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜஸ்பிர் சிங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீசார் அழைத்து வந்தனர்.
அப்போது நீதிமன்ற வளாகத்தினுள் நுழைந்த நபர் திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஜஸ்பிர் சிங்கை சுட முயன்றதாக கூறப்படுகிறது. இதை கண்ட அருகில் இருந்த போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் அந்த நபரை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து ஜஸ்பிர் சிங்கை பாதுகாப்பாக போலீசார் அழைத்துச் சென்றனர்.
பிடிபட்ட நபர் ஷகிப் சிங் என்றும் மொரிந்தா பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. என்ன காரணத்திற்காக ஜஸ்பிர் சிங் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றார் என தெரியவராத நிலையில், அது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். குருத்வாரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜஸ்பிர் சிங்கை, இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஜஸ்பிர் சிங் போலீஸ் காவலுக்கு சென்றால் பல்வேறு உண்மைகள் தெரிய வரும் என்ற காரணத்திற்காக இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றதா அல்லது வேறேதும் காரணமா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குருத்வாரா கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என பஞ்சாப் முதலமைச்சர் பக்வத் மான் தெரிவித்து உள்ள நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு முயற்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.