டெல்லி: இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட கோவின், ஆரோக்கிய சேது செயலிகள் மூலம் முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில் முதல் நாளிலே 80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்தனர்.
இந்தியாவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி போடப்பட்டுவந்தது. இந்த நிலையில் கரோனாவின் தாக்கம் அதிகரித்துவந்த நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மே 1ஆம் தேதிமுதல் தடுப்பூசி போடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கும்விதமாக கோவின், ஆரோக்கிய சேது செயலிகள் மூலம் முன்பதிவு தொடங்கியது. நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த முன்பதிவில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவு எண் பெறுவதில் பயனாளிகள் அவதியடைந்தனர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு இரு செயலிகளும் சீராக இயங்கின. இதன்மூலம் 18 வயது முதல் 44 வயதுடையவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலான இந்த 3 மணி நேரத்தில் 80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்தனர். ஒரு விநாடிக்கு 55 ஆயிரம் பேர் செயலியைப் பயன்படுத்தினர்.