ராய்கட்: மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள கோபோலி(Khopoli) பகுதியில் உள்ள மும்பை - புனே தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை (ஏப்ரல் 15) அதிகாலை சுமார் 4.30 மணிக்கு ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 40 பேரில் 8 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் காயமடைந்த 25-க்கும் மேற்பட்டவர்களை மீட்ட மீட்ட போலீசார் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர். மேலும் கிரேன் மூலம் மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ள போலீசார் மற்றும் மீட்பு படை வீரர்கள் உயிர் தப்பிய மேலும் சிலரை கயிறு மூலம் மீட்டு வருகின்றனர்.
விபத்து தொடர்பாக ராய்கட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது,"கோரேகான் பகுதியை சேர்ந்த 40 பேர் ஒரு நிகழ்ச்சிக்காக புனே சென்றுவிட்டு திரும்பிய போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடந்துள்ளது. இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து 90 விழுக்காடு சேதமடைந்துள்ளது. கிரேன் மூலம் மீட்பு பணிகள் தொடர்கிறது" என்று தெரிவித்தார்.
இதனிடையே, கர்நாடக மாநிலம் தும்கூரு அருகே உள்ள ஹிரேஹல்லி பகுதியில் சொகுசு கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்ட போலீசார் தும்கூரு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ''இது ஒரு புரட்சி; சிலை மட்டும் அல்ல'' - அம்பேத்கர் சிலையைத் திறந்துவைத்து கேசிஆர் பேச்சு