நுஹ் (ஹரியானா): கடந்த ஜூலை 31 அன்று, ஹரியானா மாநிலம் குருகிராமை ஒட்டி உள்ள நுஹ் பகுதியில் விஷ்வ இந்து பரிஷத் (VHB) சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா நடைபெற்றது. இந்த யாத்திரை குருகிராம் - ஆல்வார் பகுதிகளுக்கு இடையே வந்தபோது இளைஞர்கள் குழு ஒன்று தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது.
தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலையான அந்தப் பகுதியில் இளைஞர்கள் ஊர்வலத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் ஏற்பட்டது. மேலும், இது தொடர்பாக உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் கிடைக்க நிலையில், சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்தனர்.
பின்னர், கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினர். அதிலும், பஜ்ரங் தள ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட சர்ச்சைக்கு உரிய வீடியோ காரணமாகவே இந்த கலவரம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
அதேபோன்று, கடந்த பிப்ரவரி 17 அன்று ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நசீர் (25) மற்றும் ஜுனைத் (35) ஆகியோர் பிப்ரவரி 16 அன்று அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு உள்ளனர். பின்னர், இவர்கள் இருவரும் ஹரியானாவின் பிவானி மாவட்டத்தில் உள்ள லோஹாருவில் கார் உடன் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இதனையடுத்து இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட இருவருக்கும் பஜ்ரங் தள் கட்சியைச் சேர்ந்த லோகேஷ், ரின்கு சைனி, ஸ்ரீகாந்த் மற்றும் மோனு மானேசர் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது தெரிய வந்து உள்ளது. இதன் அடிப்படையில், இவர்கள் மீது ராஜஸ்தானின் கோபால்கர் காவல் துறையினர் இந்திய தண்டனைச் சட்டத்தின் 143, 365, 367, மற்றும் 368 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருந்தனர்.
இந்த நிலையில், நுஹ் வன்முறை சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த பசு பாதுகாவலரும், பஜ்ரங் தள் கட்சியைச் சேர்ந்தவருமான மோனு மனேசரை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து மோனு மனேசரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நுஹ் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதாக காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க:காருடன் எரிந்த நிலையில் 2 உடல்கள்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..