ரூர்கேலா: பணப்பரிவர்த்தனைகள் டிஜிட்டல் மயமாகி பல ஆண்டுகள் ஆகின்றன. ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளைக் கடந்து, டிஜிட்டல் நாணயமே புழக்கத்திற்கு வந்தாயிற்று. தற்போதைய நிலையில், உலகளவில் ஒரு பணப் பரிவர்த்தனையை செய்ய சில விநாடிகள் மட்டுமே போதும். அப்படியிருக்கையில், வெறும் 500 ரூபாய் ஒருவரை சென்றடைய நான்கு ஆண்டுகள் ஆனது என்றால் நம்ப முடிகிறதா? ஆம். அப்படி ஒரு சம்பவம் ஒடிஷா மாநிலத்தில் நடந்துள்ளது.
ஒடிஷா மாநிலம், ரூர்கேலாவில் வசித்துவருபவர், பிரமோத் பிரதான். இவரது சகோதரி சுமித்ரா பிஸ்வால், ரூர்கேலாவிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுந்தர்கர் மாவட்டத்தின் டென்சா பகுதியில் வசித்து வருகிறார்.
பிரமோத், கடந்த 2018ஆம் ஆண்டு சாவித்ரி விரதத்தின்போது, தனது சகோதரிக்கு 500 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பியிருந்தார். ரூர்கேலாவில் செக்டார் 19ல் உள்ள தபால் நிலையத்திலிருந்து மணி ஆர்டரை அனுப்பினார். அந்த மணி ஆர்டர் சுமித்ராவுக்கு அப்போது கிடைக்கவில்லை. அதனால், சகோதரனிடம் பணம் இல்லை. அதனால் தனக்கு அனுப்பவில்லை என சுமித்ரா நினைத்துக்கொண்டார். அதன் பிறகு இந்த மணி ஆர்டர் குறித்து, இருவரும் பேசிக்கொள்ளவில்லை, அதை மறந்தே விட்டார்கள்.