தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்தத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.
மாநிலத்தில் நிலவும் வேலையின்மைக்குக் காரணம் அதிமுக தலைமையிலான அரசு என விமர்சித்த அவர், வரும் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும், பட்டப்படிப்பை முடித்து ஐந்து லட்சம் மாணவர்கள் கல்லூரியை விட்டுவெளியேறுகின்றனர். புதிதாக வேலைவாய்ப்பை உருவாக்கித் தராததால் அவர்கள் அனைவரும் அதிமுக அரசுக்கு எதிராக உள்ளனர். மாநிலத்தில் முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது" என்றார்.
இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச அளவில் போர்க்குற்ற விசாரணையை நடத்தக்கோரி கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவளிக்காமல் இந்தியா வாக்கெடுப்பைப் புறக்கணித்துள்ளதை விமர்சித்த மொய்லி, தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக மத்திய அரசு நடந்துகொண்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து பேசிய மொய்லி, "நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் 39 இடங்களை வென்றதுபோல் திமுக - காங்கிரஸ் கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெறும். அதிமுக, பாஜக கட்சிகளுக்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்களின் கோபம் உள்ளது" என்றார்.