டெல்லி:மத்திய பிரதேச மாநிலத்தின் 230 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த நவம்பர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெற்று, டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றிருந்தது. அம்மாநிலத்தில் 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக, இம்முறையும் 163 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்தது.
இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநில தலைநகர் போபாலில் உள்ள லால் பரேட் மைதானத்தில் நடந்த நிகழ்வில், மத்திய பிரதேச முதலமைச்சராக மோகன் யாதவ் இன்று பதவி ஏற்றார். மேலும், ராஜேந்திர சுக்லா மற்றும் ஜெகதீஷ் தேவ்தா ஆகிய இருவரும் துணை முதலமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மத்திய பிரதேச சட்டசபையின் சபாநாயகராக, முன்னாள் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், சத்தீஸ்கரில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளில் 54 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைப் பிடித்திருந்தது. இந்நிலையில், இன்று மதியம் 2 மணி அளவில் ராஜ்பூரில் உள்ள அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நிகழ்வில், சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் பதவி ஏற்க உள்ளார்.
முன்னதாக, சத்தீஸ்கரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் சத்தீஸ்கரின் அடுத்த முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் பெயரை, அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், பாஜக மாநிலத் தலைவருமான ராமன் சிங் அறிவித்திருந்தார். இதனை அடுத்து, பதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு பாஜக தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் விஷ்ணு தியோ சாய் அழைப்பு விடுத்திருந்தார்.
அந்த வகையில் இன்று நடைபெறும் விஷ்ணு தியோ சாய் பதவி ஏற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இஸ்ரேல் - பாலஸ்தீன போர்; ஐநாவின் உடனடி மனிதாபிமான போர் நிறுத்த வரைவு தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு!