டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அன்று காலை 10.45 மணி அளவில், குனோ தேசிய பூங்காவில் 8 சிவிங்கிப்புலிகளை விடுவிக்கிறார். அதன் பின் பிற்பகல் 2.30 மணியளவில் ஷியோபூரில் நடக்கும் மகளிர் சுயஉதவிக் குழு மாநாட்டில் பங்கேற்கிறார்.
இந்தியாவில் சிவிங்கிப்புலிகள் அழிந்துவிட்டதாக 1952ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தற்போது விடுவிக்கப்படும் சிவிங்கிப்புலிகள் ஆப்பிரிக்காவின் நமீபியாவிலிருந்து கொண்டுவரப்பட்டவை. இதற்காக இந்தாண்டு தொடக்கத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. உலகிலேயே முதல் முறையாக கண்டங்களுக்கு இடையே மாமிச உண்ணியான விலங்கு மாற்று இடங்களுக்கு கொண்டுவரப்படுகிறது.
இந்தியாவுக்கு மீண்டும் சிவிங்கிப்புலிகளை கொண்டுவந்திருப்பது வனம் மற்றும் புல்வெளி சூழலை மீட்டமைக்க உதவும். இது பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க உதவுவதுடன் தண்ணீர் பாதுகாப்பு, கரியமில வாயு சமநிலைப்படுத்தல், மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாத்தல், ஒட்டுமொத்தமாக சமூகத்திற்கு பயனளித்தல் போன்ற சூழல் சேவைகளை விரிவுப்படுத்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.