டெல்லி: உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் என மூன்று மாநிலங்களில் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மேலும், கோவாவில் பெரும்பான்மைக்கு ஒரு இடம் மட்டும் குறைவாக இருக்க, 20 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தில் கடந்த முறை 300க்கும் மேற்பட்ட இடங்களை வென்ற பாஜக இந்த முறை 273 தொகுதிகளை கைப்பற்றியிருந்தாலும், 36 ஆண்டுகளுக்குப் பிறகு உ.பி.,யில் ஒரே கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கிறது என்ற சாதனையை பாஜக புதிதாகப் படைத்துள்ளது.
சாதி ஒற்றுமைப்படுத்தியுள்ளது
இந்நிலையில், பாஜகவின் தேர்தல் வெற்றியைக் கொண்டாட டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி இன்று வருகை புரிந்தார்.
அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பை அளித்த நிலையில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி ஆகியோரும் தலைமை அலுவலகம் வந்தனர்.
இதையடுத்து, அங்கு பேசிய பிரதமர் மோடி, சட்டப்பேரவை தேர்தல்களில் சாதியின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அவர், சாதி இங்கு நாட்டை பிரிப்பதற்கு இல்லாமல் ஒற்றுமைப்படுத்தப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
எதிர்க்கட்சிகளின் பாட்ஷா பலிக்காது
மேலும், பாஜகவை வெற்றியடைய வைத்த மக்களுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி, "2019இல் நாம் மத்தியில் ஆட்சியமைத்தபோது 2017இல் உத்தரப்பிரதேசத்தில் பெற்ற வெற்றிதான் அதற்குக் காரணம் என அரசியல் வல்லுநர்கள் கூறினர். தற்போது, 2022இல் நாம் பெருமளவில் வெற்றியைக் குவித்துள்ளோம். எனவே, 2024 மக்களவையிலும் நாம்தான் ஆட்சியமைப்போம்" எனத் தெரிவித்தார்.
உக்ரைன், கரோனா போன்ற உலகம் கடந்த 100 ஆண்டுகளில் சந்தித்த நெருக்கடியின் மத்தியிலும், ஐந்தில் நான்கு மாநிலங்களை பாஜக கைப்பற்றியுள்ளது எனக் கூறினார்.
ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து பேசிய மோடி,"தற்போதயை போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு. ஆனால், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் நம் மீது கறை பூசவே முயன்றனர். ஆப்ரேஷன் கங்காவையும் அவர்கள் குறை கூறினர். அதையெல்லாம் மக்கள் பொருட்டாக கருதவில்லை" என்றார்.
மேலும், இந்தியாவில் தற்போது மிச்சமிருக்கும் குடும்ப அரசியலையும் பாஜக துடைத்து எறியும் என்றார். இந்த வெற்றி, இந்தியாவின் ஒளிமையமான எதிர்காலத்தின் பிரதிபலிப்புதான் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உ.பி.யின் 36 ஆண்டுகால தேர்தல் வரலாற்றை மாற்றிய யோகி!