வதோதரா: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் தடாலடியான கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். சமீபத்தில் தமிழ்நாடு வந்திருந்த அவர், தமிழ்நாட்டில் பாஜக இருக்கின்றதா என்றும், அண்ணாமலை யார் என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், பிரதமர் மோடி 2024 தேர்தலில் போட்டியிடக்கூடாது எனக் கூறி மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளார். வதோதராவில் உள்ள பாருல் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்லூரி மாணவர்களிடம் பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, “பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் மோடி தோல்வியடைந்துவிட்டார் என்று நான் நம்புகிறேன். அதனால் அவர் பிரதமர் போட்டியில் இருக்கக் கூடாது” என்றார்.
சீன விவகாரத்தில் பிரதமர் மோடியின் மௌனம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், அந்த நாடு ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் இந்தியப் பகுதியை ஆக்கிரமித்துள்ளது, ஆனால் பிரதமர் அதன் பெயரைக் கூட உச்சரிக்கவில்லை என்றார். மேலும், “நம்முடைய சுமார் 4,024 சதுர கிலோ மீட்டர் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது. ஆனால், மோடி அமைதியாக இருக்கிறார். சுப்பிரமணியன் சுவாமி அப்படிச் சொன்னார் என்று அவரிடம் சொல்லுங்கள்.
மோடி தனது அமெரிக்கப் பயணத்தின்போது சீனாவைப் பற்றி ஒரு வார்த்தை கூட பைடனிடம் பேசாதது ஏன்? இது ஒன்றும் புதிதல்ல, இது நீண்ட நாட்களாக நடக்கிறது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுக்கு எதிராக கலகம் செய்த முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது எம்எல்ஏக்களை பாஜக விரைவில் நிராகரிக்கும்.