மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்பட பல்வேறு வளர்ச்சிப் பணித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று(பிப்.14) சென்னைக்கு வந்தார். எப்போதும், திருக்குறளை மேற்கோள்காட்டும் அவர் இம்முறை ஒளவையார் மற்றும் பாரதியாரின் வரிகளை குறிப்பிட்டுப் பேசினார்.
நேரு உள்விளையாட்டு அரங்கில் பேசிய அவர்,
'வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக்குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்'
என ஒளவையார் விவசாயம் - நீர் மேலாண்மை குறித்து பேசியதை மேற்கோள் காட்டினார்.
விவசாய நிலத்தின் வரப்பை உயர்த்தினால், வயலில் அதிக அளவில் நீர் தங்கும். நீர் நிறைய தங்கினால் நெல் விளைச்சல் உயரும். நெல் விளைச்சல் நன்றாக இருந்தால், மக்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். எங்கே மக்கள் வறுமையின்றி மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ, அந்த அரசே சிறப்பான அரசாக விளங்கும். அப்படி சிறந்த அரசை ஆளும் மன்னன் மிக உயர்ந்தவனாக போற்றப்படுவார், மிகுந்த நற்பெயர் பெறுவார் என்ற பொருள்பட பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடியின் தமிழ் பெருமிதம் ஆவடியில் தயாரிக்கப்பட்டுள்ள அர்ஜூனா டேங்க் பற்றி பேசும்போது,
'ஆயுதம் செய்வோம்; நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம்; கல்விச் சாலைகள் வைப்போம்
குடைகள் செய்வோம்; உழுபடைகள் செய்வோம்
கோணிகள் செய்வோம்; இரும்பாணிகள் செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்'
என்ற பாரதியாரின் கவிதையை மேற்கோள்காட்டினார்.