கொல்கத்தா: மேற்கு வங்கம் மாநிலத்தை கைப்பற்ற நினைக்கும் பாஜக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான அரசியல் சச்சரவுகள் நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றன.
இந்தச் சூழலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகங்களை வகுத்துவரும் பிராசாந்த் கிஷோர், செய்தியாளர் குழுவுடனான உரையாடலின் போது பாஜகவுக்கு ஆதரவாக பேசியது போன்ற ஆடியோ ஒன்றை பாஜக தகவல் தொழில்நுட்பக் குழுத் தலைவர் அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமித் மால்வியா வெளியிட்டுள்ள அந்த ஆடியோவில்," மேற்கு வங்கத்தில் ஹிந்தி பேசும் மக்களிடம் மோடிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. பத்து ஆண்டு கால திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் மீதான அதிருப்தி அதிகமாகியிருக்கின்றன. பட்டியலினத்தவர்களின் வாக்குகளை பாஜக பெருவாரியாக கைப்பற்றும்.
அமித் மால்வியாவின் ட்விட் கடந்த 20 ஆண்டு காலங்களாக இடதுசாரிகள், காங்கிரஸ், திரிணாமுல் ஆட்சிகளில் சிறுபான்மை ஆதரவு மனநிலை நிலவியது. இந்துகளுக்கு பாஜகதான் முக்கியத்துவம் அளிக்கிறது என்று அவர்கள் எண்ணுகின்றனர். மாதுவாஸ் சிறுபான்மையினப் பிரிவினரும் பாஜகவுக்கு வாக்களிக்கும் சூழலே உள்ளது. பாஜகவின் கடைசி தொண்டர்கள் மாநிலத்தின் பெரும்பகுதியில் கிளைப் பரப்பி ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பதே நிதர்சனம்" என்று பிரசாந்த் கிஷோர் பேசியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரஷாந்த் கிஷோர், "பாஜக தனது தலைவர்களின் பேச்சுகளை விட என்னுடைய தனிப்பட்ட உரையாடலுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த பேச்சின் முழுமையான உரையாடலை வெளியிடமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் மொத்தமிருக்கும் 294 தொகுதிகளுக்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடைப்பெறுகிறது. இதில் 44 தொகுதிகளுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.10) நடைபெற்றது.
இதையும் படிங்க:மேற்கு வங்கத் தேர்தல்: 200 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்!