டெல்லி: ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலைமை மோசமாக உள்ளது. இவ்விவகாரத்தில் நரேந்திர மோடி அரசாங்கம் விழிப்புடன் செயல்பட வேண்டும். வருங்கால டெல்லி- காபூல் உறவு குறித்தும் சிந்திக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், “ நாடு மற்றும் நாட்டு மக்களை பாதுகாப்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் தவித்துவருகின்றனர்.
இந்நிலையில், நரேந்திர மோடி அரசாங்கம் முழு மௌனத்தை கடைபிடிப்பது அதிர்ச்சியூட்டும் ஆச்சரியமாக உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் சிக்கித் தவிக்கும் நமது நாட்டு மக்களை பத்திரமாக மீட்பது குறித்து நரேந்திர மோடி அரசாங்கம் திட்டம் எதுவும் செயல்படுத்தாமல் இருப்பது பொறுப்பை தட்டிக் கழிக்கும் செயல் ஆகும். நரேந்திர மோடி அரசாங்கம் தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
மேலும், “தலிபான்களுக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ, ஜெய்ஷ்-இ-முகம்மது, லக்ஷர்-இ-தொய்பா, ஜமாத் உத் தவா உள்ளிட்ட இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது” என்றும் சுர்ஜேவாலா குற்றஞ்சாட்டினார். ஆப்கானிஸ்தானில் அரசை எதிர்த்து போராடிவரும் கிளர்ச்சியாளர்களான தலிபான்கள் அந்நாட்டை கைப்பற்றி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : தலிபான்கள் சாதாரண குடிமக்கள்- இம்ரான் கான்