இந்தியாவில் தொடரும் பாஜகவின் நீண்டகால ஆட்சியினை கைப்பற்று விதமாக பல்வேறு வேலைகளை அகில இந்திய காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் பல ஆண்டுகளாக காத்திருந்தன என்றே சொல்லலாம். இதற்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பமாக, அதாவது மோடி ஆட்சியில் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த சம்பவம் நாடெங்கும் உள்ள மாணவர்களுக்கு மத்தியிலே முதலில் தீயாக பரவத் தொடங்கியுள்ளது எனலாம். பிபிசி நிறுவனம் வெளியிட்ட ஒரு ஆவணப்படம் இவ்வாறு நாடெங்கும் மாற்றங்களை கொண்டுவரும் என பாஜகவினர் யூகித்திருக்க வாய்ப்பில்லை.
கொந்தளிப்பில் ஏபிவிபி அமைப்பினர்:பிரதமர் மோடி, குஜராத் முதலமைச்சராக இருந்தபோது நடந்த மதக் கலவரத்தை அடிப்படையாகக் கொண்ட 'இந்தியா: மோடி கேள்விகள்' என்ற ஓர் ஆவணப்படத்தை பிபிசி நிறுவனம் தயாரித்துள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த ஜன.25ஆம் தேதி இதனை திரையிடப்படும் என மாணவர்கள் அமைப்பின் தலைவர் அயிஷா கோஷ் அறிவித்தார். இதற்கு பாஜக மாணவர் அமைப்பின் ஏபிவிபினர் கடும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அந்த அமைப்பினருக்கும் பிற மாணவர்களுக்கும் இடையே கடும் கல்வீச்சு தாக்குதல்கள் அரங்கேறின.
பிற பல்கலைக்கழகங்களிலும் காட்சி:அதேபோல, குறிப்பாக ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் இந்த பிபிசியின் ஆவணப்படம் பதிவு முதல்முறையாக திரையிடப்பட்டது. பல எதிர்ப்புகளையும் தாண்டி அப்பல்கலைக்கழகத்தின் சகோதரத்துவ இயக்கம் எனும் மாணவர் அமைப்பினர் இதை திரையிட்டனர். இதனைத்தொடர்ந்து, இதுகுறித்து ஏபிவிபி சார்பில் போலீஸாரிடம் புகார் அளித்த நிலையில் விசாரணை நடந்து வருகிறது. கேரள அரசு சட்ட கல்லூரியிலும், மேற்குவங்க மாநில பல்கலைக்கழகங்களிலும் இந்த ஆவணப்படத்தை திரையிடுவதற்கு எதிர்ப்புகள் எழுந்தன.
இதுகுறித்து ஏபிவிபி சார்பில் போலீஸாரிடம் அளிக்கப்பட்ட புகார் விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே, இந்தியாவின் தகவல் மற்றும் தொழில்நுட்ப விதிகளின் கீழ் அரசாங்கத்திற்கு கிடைக்கும் "அவசரகால அதிகாரங்களை" பயன்படுத்தி ஆவணப்படத்தை தடுப்பதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.