டெல்லி:அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று (ஜூன் 4) இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இன்று (ஜூன் 5) சந்தித்து, லாய்டு ஆஸ்டின் ஆலோசனை நடத்தினார். இரு நாடுகளின் பாதுகாப்பு துறை செயல்பாடுகள், ஒருங்கிணைந்து செயல்படுதல், நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவை குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாய்டு, “பாதுகாப்புத்துறையில் இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து நவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டு வருவதை பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதற்காக ‘INDUS-X’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு வரும் போது முறைப்படி அறிமுகம் செய்யப்படும்.
தொழில்நுட்பம் மட்டுமின்றி அனைத்து வகையான அம்சங்களையும் இரு தரப்பும் பகிர்ந்து கொள்வோம். ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் இணைந்து செயல்படுவது குறித்து ராஜ்நாத் சிங்குடன் ஆலோசித்தேன். கடல்வழி போக்குவரத்திலும், தொழில்நுட்பங்களை பரிமாறுவது குறித்து ஆலோசனை செய்தோம்" என கூறினார்.
இதையடுத்து இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவுவது குறித்து, அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்டுடன், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தீவிர ஆலோசனை நடத்தினார். பின்னர் ராஜ்நாத் சிங் தனது டிவிட்டர் பதிவில், “இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் சுதந்திரமான பாதுகாப்புக்கு இந்தியா - அமெரிக்கா கூட்டாண்மை மிகவும் முக்கியமானது. அமெரிக்கா பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டினை சந்தித்து ஆலோசித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு துறைகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தோம்" என கூறியுள்ளார்.