சென்னை:சீனாவில் மீண்டும் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனால் இந்தியாவில் தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக சர்வதேச சா்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சீனா, ஜப்பான் உள்ளிட்ட ஐந்து நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை உறுதி செய்யும் நோக்கில் பல மாநிலங்களின் மருத்துவமனைகளில் செவ்வாய்க்கிழமை(டிச.27) சுகாதார ஒத்திகை நடைபெறவுள்ளது. ஒத்திகைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. மருத்துவமனைகளில் உள்ள சுகாதார வசதிகள், நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கான படுக்கை வசதி, மருத்துவ ஆக்சிஜன்(O2) வசதி கொண்ட படுக்கைகள், அவசர சிகிச்சைக்கான படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவி இணைக்கப்பட்டுள்ள படுக்கைகள், போதிய எண்ணிக்கையிலான மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், ஆயுஷ் மருத்துவா்கள், ஆஷா, அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்ட மற்ற முன்களப் பணியாளா்கள் குறித்து ஒத்திகையின்போது ஆய்வு செய்யப்படவுள்ளது.