அசோக் நகர் : மத்திய பிரதேசத்தில் ஸ்மார்ட்போன் வாங்கினால் 2 கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என்ற கடை உரிமையாளரின் அறிவிப்பு சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது.
தட்டுப்பாடு காரணமாக காய்கறிகள் விலை ஏறுவது சகஜம் தான், ஆனால் தற்போது ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் முதல் 160 ரூபாய் வரை விற்கப்படுவது நடுத்தர மக்களின் கனவை கலைத்து உள்ளது. தக்காளி விலை உயர்வு காரணமாக பிரபல உணவு நிறுவனமான மெக்டொனால்டு, தனது மெனுவில் இருந்து தக்காளியை நீக்கிவிட்டதாக செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
அதேநேரம் வாடிக்கையாளர்களை கவரும் வாய்ப்பை வணிகர்கள் ஒருபோதும் விட்டுவிட மாட்டார்கள். பண்டிகை காலங்களில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சிறப்பு சலுகைகளை வணிக நிறுவனங்கள் அறிவிக்கும். ஆனால் சில வணிக நிறுவனங்கள் மட்டுமே வித்தியாசமாக சிந்தித்து வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கவும், விற்பனையை அதிகரிக்கவும் புதுமையான திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன.
அப்படி மத்தியப் பிரதேசத்தில் உள்ள அசோக் நகரை சேர்ந்த மொபைல் கடைக்காரர் ஒருவர் ஸ்மார்ட்போன் வாங்கினால் இரண்டு கிலோ தக்காளியை இலவசமாக வழங்குவதாக அறிவித்து உள்ளார். தற்போது சமூக வலைதள பக்கங்களில் இந்த தலைப்பு பலரது கவனத்தை ஈர்த்து உள்ளது.