புதுச்சேரி: இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன டயர்கள் பழுது ஏற்படும்போது, நாம் வாகனங்களை தள்ளவும் முடியாமல், பழுதுபார்க்கும் கடைக்கு எடுத்துச் செல்லவும் முடியாமல் தவித்து நிற்கும் நிலையை நம்மில் சிலர் அனுபவித்திருப்போம்.
தற்போது, கரோனா தொற்று பரவல் காரணமாக, புதுச்சேரியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியத் தேவைகளுக்கு வெளியில் சென்று வரக்கூடிய வாகனங்களில் பழுது ஏற்படும்போது, வாகன ஓட்டிகள் அதனை சரிசெய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனைக்கண்ட புதுச்சேரியைச் சேர்ந்த விவிபி நகரில், பஞ்சர் கடை நடத்தி வரும் நவீன் என்ற இளைஞர், தான் படித்த டிப்ளமோ ஆட்டோமொபைல் கல்வி அறிவை பயன்படுத்தி, சொந்தமாக தனது இருசக்கர வாகனத்தில் நடமாடும் பஞ்சர் கடை ஒன்றை உருவாக்கியுள்ளார். அதன் மூலம் வீடுகளுக்கே சென்று பஞ்சர் ஒட்டும் வேலையை செய்து வருகிறார்.
இவர் பிரத்யோகமாக வடிவமைத்த இருசக்கர வாகனத்தில் காற்றை நிரப்பக்கூடிய கம்ப்ரசர் உடன் கூடிய டேங்க் மற்றும் வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டத் தேவையான உபகரணங்கள் என பஞ்சர் கடையில் உள்ள அனைத்தையும் தனது இருசக்கர வாகனத்திலேயே அடக்கி புதுமையான 'நடமாடும் பஞ்சர் கடை' வடிவமைப்பைக் கொடுத்துள்ளார்.
தான் டிப்ளமோ ஆட்டோமொபைல் படித்துள்ளதாகவும், தன் தந்தைப் பார்த்து வந்த பஞ்சர் தொழில் கரோனா காலகட்டத்தில் நலிவடைந்ததாகக் கூறும் நவீன், தற்போது இந்தப் புது முயற்சியால் நிறைய அழைப்புகள் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மக்கள் அனைவருக்கும் தன்னை ஒரு கைபேசி அழைப்பின் மூலம் இலகுவாக அணுக முடிகிறது என்பதால், தற்போது ஓய்வில்லாமல் பஞ்சர் ஒட்டும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் பூரிப்படைகிறார், நவீன யுகத்தின் பஞ்சர் நாயகன் நவீன்...
தன்னம்பிக்கை மற்றும் மாத்தியோசி டெக்னிக்கில் சாதித்து இருக்கும் நவீனுக்கு பூங்கொத்து!