பாட்டியாலா: பஞ்சாப்பில் உள்ள பாட்டியாலா பகுதியில் காலிஸ்தான் எதிர்ப்பு அணிவகுப்பு தொடர்பாக இரு குழுக்களிடையே மோதல் ஏற்ப்பட்டது. இந்த மோதலில் இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கி கொண்டதில் நான்கு பேர் காயமடைந்தனர்.
இந்த மோதலை நிறுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியில் சுட்டனர். இதையடுத்து மோதலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறை அந்த பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவும், அமைதியை கொண்டு வரவும் காலை 9.30 மணியிலிருந்து மாலை 6 மணி வரை தற்காலிமாக இணைய சேவைகளை முற்றிலும் முடக்கியுள்ளது.
சேவைகளை இடைநிறுத்துவதற்கான உத்தரவு உள்துறை மற்றும் நீதித்துறையால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மோதல் நடந்த இடமான காளி மாதா கோயிலுக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து பாட்டியாலாவில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக சிவசேனா கட்சியின் பிரமுகர் ஹரிஷ் சிங்லா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் “மக்களிடையே மீண்டும் அமைதியை கொண்டு வருவதற்காகவே தற்காலிக இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் "டெலிகாம் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏப்.30 ஆம் தேதி காலை 9:30 மணி முதல் மாலை 6 மணி வரை பாட்டியாலா மாவட்டத்தில் குரல் அழைப்புகள் தவிர மொபைல் நெட்வொர்க்குகளில் வழங்கப்படும் அனைத்து எஸ்எம்எஸ் சேவைகள் மற்றும் அனைத்து டாங்கிள் சேவைகள் போன்றவை நிறுத்தப்பட்டுள்ளன” என்றார்.
இந்தச் சம்பவம் குறித்து தேசிய சிறுபான்மையினர் ஆணையம் (என்சிஎம்) பஞ்சாப் தலைமைச் செயலாளர் அனிருத் திவாரியிடம் அறிக்கை கேட்டு ஒரு வாரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. பாட்டியாலாவில் சிறுபான்மை சமூகம் சம்பந்தப்பட்ட மோதல் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளை கவனத்தில் கொள்ளுமாறு தலைமைச் செயலாளருக்கு தேசிய சிறுபான்மையினர் ஆணையம் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நெல்லை: மாணவர்களுக்கிடையே சாதி ரீதியாக நடைபெற்ற மோதலில் மாணவர் உயிரிழப்பு!