மணிப்பூர்: மணிப்பூரில் பெரும்பான்மை சமூகமான மெய்தீஸ் சமூகத்தை எஸ்டி பிரிவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் பழங்குடியின மாணவர் அமைப்பு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பழங்குடி மக்களின் போராட்டத்திற்கு எதிராக மெய்தீஸ் சமூகத்தினரும் போராட்டதில் இறங்கியதால், மணிப்பூர் கலவர பூமியாக மாறியது. சுமார் மூன்று மாதங்களாக அங்கு இனக்கலவரம் நடந்து வருகிறது.
இதனிடையே, மணிப்பூரில் காங்போக்பி மாவட்டத்தில் கலவரக்காரர்கள் இரண்டு குக்கி சமூக பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த சில நாட்களுக்கு வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவம் கடந்த மே 4ஆம் தேதி நடந்த நிலையில், சுமார் 75 நாட்களுக்குப் பிறகு இது தொடர்பான வீடியோ வெளியானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடைய மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர். காங்போக்பி, தவுபால் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சம்பவத்தில் கைதான மெய்தீஸ் சமூகத்தைச் சேர்ந்த குற்றவாளியின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. தவுபால் மாவட்டத்தில் யெய்ரிபோக் கிராமத்தில் உள்ள குற்றவாளியின் வீட்டை, அவரது சொந்த கிராமத்தைச் சேர்ந்த மெய்தீஸ் சமூக பெண்கள் அடித்து நொறுக்கினர். அவரது வீட்டின் மீது தாக்குதல் நடத்தி, தீ வைத்து கொளுத்தினர்.