புதுக்கோட்டை திமுக ராஜ்யசபா எம்.பி.,யான எம்.எம்., அப்துல்லா இன்று நாடாளுமன்றத்தில் புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் H.H.ராஜா ஸ்ரீ ராஜகோபால தொண்டைமான் பகதூருக்கு ஒன்றிய அரசு அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவிக்க கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து பேசிய அவர், “புதுக்கோட்டை சமஸ்தானமானது 1680 முதல் 1948 வரை இருந்த அரச மாகாணம். சுதந்திரத்திற்குப் பிறகு, 1948ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதியன்று இந்திய ஒன்றியத்துடன் சேருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் சமஸ்தானமும் இதுவேயாகும். தற்போதைய தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பகுதிதான் இது.
H.H. ராஜா ஸ்ரீ ராஜகோபால தொண்டைமான் பகதூர் தான் இந்த புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஒன்பதாவதாகவும், கடைசியாகவும் முடிசூட்டப்பட்ட மன்னர் ஆவார். இந்தியா சுதந்திரம் அடைந்தவுடனே தனது நாட்டை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ள அவர் தீர்மானித்தார். தனது மொத்த கருவூலத் தொகையுடன் சுதந்திர இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் முழு மனதுடன் கையெழுத்திட்ட முதல் மன்னரும் இவரே.
அப்போதைய ஒன்றிய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் கூட H.H. ராஜா ஸ்ரீ ராஜகோபால தொண்டைமான் அவர்களால் தான் இந்தியாவுடன் சமஸ்தானங்களை இணைக்கமுடியும் என்னும் நம்பிக்கையைப் பெற்றார். மேலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வேண்டுகோளின்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் செயல்பாட்டிற்காக தன்னலமின்றி தனது அரச மாளிகையை வழங்கியவர்.