பெங்களூரு: கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் மே 10ஆம் தேதி நடக்க உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்த நாள் முதல் அம்மாநிலத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், 9வது முறையாக தேர்தலில் காங்கிரஸின் வேட்பாளராக ஆர்.வி.தேஷ்பாண்டே அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.வி.தேஷ்பாண்டே:மூத்த காங்கிரஸ் தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே 8 முறை எம்.எல்.ஏவாக வென்றுள்ளார். வரும் மே 10ஆம் தேதி நடக்க உள்ள கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 10வது முறையாக போட்டியிடுகிறார். இவர் 1983 முதல் 1994 வரை ஜனதா பரிவார் (JP) சார்பில் போட்டியிட்டு 4 முறை எம்எல்ஏ-வாக இருந்தார். பின்னர், 1999-ல் காங்கிரஸில் இணைந்து 2004, 2013 மற்றும் 2018 தேர்தல்களில் வெற்றி பெற்றிருந்தார். இதனிடையே, 2008-ல் மட்டும் சுனில் ஹெக்டேவிடம் ஒரு முறை மட்டுமே தோல்வியடைந்தார். இவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்குப் பிறகு, சீனியரான தலைவராகப் பார்க்கப்படுகிறார்.
சித்தராமையா:கர்நாடக அரசியலில் மிக முக்கிய தலைவராக கருதப்படும் காங்கிரஸ் தலைவரான சித்தராமையா, மே 13, 2013 முதல் 2018, மே 17 வரை கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர். இதுவரையில் 10 முறை போட்டியிட்ட இவர், இடைத்தேர்தல் உட்பட 8 முறை சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக, இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிவ பசப்பாவை 250 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர், நடக்க உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 9வது முறையாக போட்டியிடுகிறார்.