புதுச்சேரி மண்ணாடிப்பட்டு சட்டப்பேரவைத் தொகுதியின் எம்எல்ஏவாக கடந்த 10 ஆண்டுகளாக என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.பி.ஆர். செல்வம் இருந்துவருகிறார். நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்படவில்லை.
அதற்குப் பதிலாக பாஜகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்திற்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் எம்எல்ஏ டிபிஆர் செல்வம் நேற்று (மார்ச் 15) தனது ஆதவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், "மண்ணாடிப்பட்டு தொகுதியில் என்.ஆர். காங்கிரசில் சீட் வாங்கி நிற்க வேண்டும்; இல்லையேல், தனித்து நிற்க வேண்டும்" என ஆதவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். அப்போது கண்ணீர்விட்டு பேசிய டிபிஆர் செல்வத்தை ஆதவாளர்கள் சமாதானப்படுத்தினர்.
இந்த நிலையில் இன்று டி.பி.ஆர். செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ரங்கசாமியின் காரை வழிமறித்து சாலையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து, டி.பி.ஆர். செல்வத்தை சமாதானப்படுத்திய ரங்கசாமி, "கூட்டணியில் இதெல்லாம் சாதாரணம்தான். இன்னும் இரண்டு நாள்களில் கட்சிக்குச் சாதகமாக நல்ல முடிவு எடுக்கப்படும். அதுவரை கூட்டணிக்கு ஒத்துழைத்துச் செல்லுங்கள்" என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து டி.பி.ஆர். செல்வமும் அவரது ஆதரவாளர்களும் கலைந்துசென்றனர்.
கண்ணீர் விட்டு அழுத எம்எல்ஏ டி.பி.ஆர் செல்வம் இதற்கிடையே என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமலேயே, வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றனர். இன்று (மார்ச் 16) என்.ஆர். காங்கிரசில் கதிர்காமம் தொகுதியில் ரமேஷ், மங்கலம் தொகுதியில் தேனி ஜெயக்குமார் ஆகியோர் மனு தாக்கல்செய்துள்ளனர். என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஏனாம், தட்டாஞ்சாவடி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார். இதில் தட்டாஞ்சாவடி தொகுதியில் அவர் நேற்று வேட்புமனு தாக்கல்செய்தார். நாளை (மார்ச் 17) ஆந்திராவில் உள்ள ஏனாம் தொகுதியில் வேட்புமனு தாக்கல்செய்கிறார்.