புதுச்சேரி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடப்பதாகக் கூறி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு நேற்று (ஜூன் 5) தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். அப்போது தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா இல்லாததால் முற்றுகையைக் கைவிட்டார். பின்னர், கம்பன் கலையரங்கில் நடந்த விழாவில் தலைமைச் செயலர் பங்கேற்ற தகவல் கிடைத்ததையடுத்து, தனது ஆதரவாளர்களுடன் நேரு அங்குச் சென்றுள்ளார்.
அங்கு அவர் வரும் தகவல் கிடைத்ததும் கம்பன் கலையரங்கத்தின் 2 வாயில் கதவுகளையும் காவல் துறையினர் இழுத்து மூடி உள்ளனர். அப்போது, கதவைத் திறக்க நேரு அறிவுறுத்தியபோதும் அவர்கள் திறக்கவில்லை. இதனால் கோபமடைந்த சட்டமன்ற உறுப்பினர் நேரு, இரும்புக் கதவின் மீது ஏறிக் குதித்து உள்ளே சென்றுள்ளார். அவரைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் கேட் மீது ஏறிச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அவர் விழா மேடைக்குக் கீழே இருந்தபடி தலைமைச் செயலரைக் கண்டித்துப் பேசினார்.
முன்னதாக புதுச்சேரி அரசு சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், தலைமைச் செயலர் ராஜு வர்மா, சட்டமன்ற உறுப்பினர் அணி பால் கென்னடி, உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் இல்லாமல் சுற்றுச்சூழலைப் பேணி பாதுகாத்த பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டது.
அதேபோன்று சுற்றுச்சூழல் சம்பந்தமாக நடைபெற்ற பல்வேறு கட்டுரை, ஓவியம், வினாடி - வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி சான்றிதழையும், விருதுகளையும் வழங்கினர். அப்போது விழா நடைபெறும் இடமான கம்பன் கலையரங்கிற்கு உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு சுவர் ஏறி குதித்து தனது ஆதரவாளர்களுடன் உள்ளே வந்தார்.