ஐஸ்வால் (மிசோரம்): மிசோரம் மாநிலத்தில் ஆளும் கட்சியான மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி சோரம் மக்கள் இயக்கம் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
மிசோரம் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் 7ஆம் தேதி 1,274 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமாக 77.66 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இங்கு ஆளும் கட்சியாக மிசோ தேசிய முன்னணி (MNF) செயல்பட்டு வந்தது. முதலமைச்சராக ஜோரம்தங்கா செயல்பட்டு வந்தார்.
இங்கு சோரம் மக்கள் இயக்கம் (Zoram People’s Movement-ZPM) மற்றும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்டவை முக்கிய கட்சியாக இருந்து வருகின்றன. மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது நேற்று டிசம்பர் 03ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையம் டிசம்பர் 04 வாக்கு எண்ணும் பணி நடைபெறும் என்று அறிவித்தது. அதன்படி வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 21 தொகுதிகளைக் கைப்பற்றவேண்டும்.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே ஆளும் கட்சியான மிசோ தேசிய முன்னணியை விட சோரம் மக்கள் இயக்கம் முன்னிலையில் இருந்தது. இந்த நிலையில் தற்போது, மிசோரம் 40 தொகுதிகளிலும் தேர்தல் முடிவுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி சோரம் மக்கள் இயக்கம் 27 இடங்களையும் மிசோ தேசிய முன்னணி 10 இடங்களையும் பாஜக 2 இடங்களையும் காங்கிரஸ் 1 இடத்தையும் கைப்பற்றி உள்ளது. இதன் மூலம் மிசோரம் மாநிலத்தில் தனிப் பெரும்பான்மையுடன் சோரம் மக்கள் இயக்கம் ஆட்சி அமைக்கவுள்ளது.
இதையும் படிங்க:மிசோரமில் தோல்வியைச் சந்தித்த துணை முதலமைச்சர்..! ஆட்சியைக் கைப்பற்றுகிறதா சோரம் மக்கள் இயக்கம்..!