ஐஸ்வால்:மிசோரம் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், மின்னணு வாக்கு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அம்மாநிலத்தின் முதல்வர் ஜோரம் தங்கா வாக்களிக்க முடியவில்லை.
மிசோரம் மாநிலத்தில் 40 தொகுதிகளில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. ஒரே கட்டமாக தொடங்கிய இந்த வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணி அளவில் திட்டமிட்டபடி தொடங்கியதையடுத்து, பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
40 தொகுதிகளிலும் சுமார் 8.52 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள நிலையில், இதற்காக 1,276 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று மாநிலத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு தொடங்குவதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இதையும் படிங்க: விமானத்தின் கழிவறைக்குள் பதுக்கி வைக்கப்பட்ட தங்கக் கட்டிகள் பறிமுதல்!
ஆளும் மிசோ தேசிய முன்னணி, சோரம் மக்களின் இயக்கம், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 170 வேட்பாளர்கள் மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் களத்தில் உள்ளனர். பதிவான வாக்குகள் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த மாநிலத்தைப் பொறுத்த அளவில் மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் ஆகியவை முக்கிய கட்சிகளாக உள்ளன.
இந்நிலையில், அம்மாநில முதல்வர் ஜோரம் தங்கா வாக்குப்பதிவு செய்ய ஐஸ்வால் வடக்கு 2 சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். அப்போது வாக்கு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அவரால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வாக்குச்சாவடி அதிகாரிகள் கோளாறை விரைவில் சரி செய்ய முயன்றனர். ஆனால் உடனடியாக சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், வாக்குச்சாவடியை விட்டு வெளியே வந்த அவர், தொகுதிக்குச் சென்று நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து வாக்களிப்பார் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: “கலைஞானி கமல்ஹாசன்” - முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!