மிசோரம்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் இன்று (நவ.7) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த நிலையில், மிசோரமில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 12.80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இதனை ஒட்டி, போலீஸ் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
மிசோரம் மாநிலம் முழுவதும் 1,276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, 40 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 8 லட்சம் வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், இன்று நடைபெறும் தேர்தலின் வாக்குகள் டிசம்பர் மாதம் எண்ணப்படும் என கூறப்படுகிறது.
மிசோரத்தின் ஆளும் கட்சியான மிசோ தேசிய முன்னனி, ஜோரம் மக்களின் இயக்கம், காங்கிரஸ் , ஆம் ஆத்மி, பாஜக என 170 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மிசோ தேசிய முன்னனி (MNF), ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) மற்றும் காங்கிரஸ் மிசோரத்தின் முன்னனி கட்சிகளாகும். 2018ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 37 சதவீத வாக்குகளுடன் மிசோரம் சட்டமன்றத்தில் 26 இடங்களைக் கைப்பற்றி மிசோ தேசிய முன்னனி (MNF) வெற்றி பெற்றது.
தேர்தல் நடைபெற்று வருகின்ற வாக்குப்பதிவு மையங்களில், 450 மத்திய ஆயுதப்படைகள் குவிக்கப்பட்டு 3,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நக்சல் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கிராமம் ஒன்று..! எம்.எல்.ஏ மட்டும் ரெண்டு..! அரசியல் ஆச்சரியம் நிறைந்த அஞ்சோரா கிராமம்!