மிசோரம்: தெலங்கானா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, 90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று (நவ.7) காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்றது. இதில், 71.93 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
சத்தீஸ்கரில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவிற்காக 5,304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. இவற்றில் பஸ்டார் பகுதியில் மட்டும் 126 கிராமங்களில் முதன் முறையாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சத்தீஸ்கர் மாநிலத்தின் 18 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் 76.42 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
இருப்பினும், இம்முறை அதிகபட்சமாக காய்ராகர்-சுயிகாடன்கண்டாயி தொகுதியில் 76.31 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து, மொஹ்லா-மான்பூர்-அம்பார்க் சவுகி தொகுதியில் 76 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக பிஜாபூர் தொகுதியில் 40.98 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.
அதேபோல், மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நேற்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று முடிந்தது. இதில் 78.40 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக செர்சிப் தொகுதியில் 84.78 சதவீத வாக்குகளும், அதனைத் தொடர்ந்து மமித் - 84.23 சதவீதம், நாதியல் - 84.16 சதவீதம், கோலாசிப் 82.77 மற்றும் காவாசாலில் 82.39 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.
இதையும் படிங்க:"ராமன் கற்பனை தான்" - பெரியாரை மேற்கோள் காட்டிய பீகார் எம்எல்ஏ