உடுப்பி: கர்நாடகா மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு ஹிஜாப்பிற்கு தடை, மசூதியில் உள்ள ஒலிபெருக்கிகளுக்கு தடை என பல்வேறு விவகாரங்கள் சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மணிபால் கல்வி நிறுவனத்தில் வகுப்பு ஒன்றில் பேராசிரியரிடம் சந்தேகம் கேட்ட முஸ்லீம் மாணவரை தீவிரவாதி என திட்டியுள்ளார்.
இதனையடுத்து என்னை தீவிரவாதி எனக் கூறாதீர்கள் எனவும், ஒரு முஸ்லீமாக நான் தினந்தோறும் பல இடையூறுகளை சந்தித்து வருவதாகவும் அம்மாணவன் பேராசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து மன்னிப்பு கேட்ட பேராசிரியரிடம் உங்கள் மன்னிப்பால் மன உணர்வுகள் மாறாது எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. இதற்கிடையில் அந்த பேராசிரியரை கல்வி நிறுவனம் இடைநீக்கம் செய்துள்ளது.