கெவாடியா:குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள ஏக்தா நகரில் ஒற்றுமைச்சிலை அருகே பிரதமர் நரேந்திர மோடி, ஐநா பொதுச் செயலாளர் அன்டனியோ குட்ரெசஸூடன் இருதரப்பு சந்திப்பில் பங்கேற்றார். அதன்பின் சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கத்தை தொடங்கிவைத்தனர். இந்த நிகழ்வில் ஐ.நா சபையின் அனைத்து பிராந்தியங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 11 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, "அன்டனியோ குட்ரெஸூக்கு இந்தியா இரண்டாவது வீடு போன்றது. தனது இளமை பருவத்தில் பலமுறை இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
இந்தியாவின் பெருமைக்குரிய சர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலையான ஒற்றுமை சிலைக்கு முன்பாக சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கம் தொடங்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. நமது வாழ்க்கைமுறையில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும். மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் இந்தியாவில் எல்இடி பல்புகளை பயன்படுத்தி வருகிறோம். இது பெரிய சேமிப்புக்கும், சுற்றுச்சூழல் நன்மைகளுக்கும் வழிவகுத்ததோடு, தொடர்ச்சியான, நிரந்தர பயன்பாட்டை அளித்துவருகிறது.
குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறு சுழற்சி, சுற்றுசுழல் பொருளாதாரத்தின் முக்கிய காரணிகளாகும். இந்தியா இன்று உலகில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான நாடுகளில் முக்கிய பங்கு வகித்துவருகிறது. நாம் காற்றாலை ஆற்றலில் உலகில் நான்காவது இடத்திலும், சூரிய சக்தியில் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறோம். இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் கடந்த 7-8 ஆண்டுகளில் சுமார் 290 சதவீதம் அதிகரித்துள்ளது. காலக்கெடுவிற்கு 9 ஆண்டுகளுக்கு முன்னதாகவே புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆதாரங்களில் இருந்து 40 சதவீத மின்சாரத் திறனை அடைவதற்கான இலக்கையும் நாம் அடைந்துள்ளோம்.
காலக்கெடுவுக்கு 5 மாதங்களுக்கு முன்பே, பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலக்கும் இலக்கையும் அடைந்துள்ளோம். தேசிய ஹைட்ரஜன் இயக்கம் மூலம், இந்தியா சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்தி ஆதாரத்தை நோக்கி நகர்ந்துள்ளோம். இது இந்தியா மற்றும் உலகின் பல நாடுகளின் நிகர பூஜ்ஜிய இலக்கை அடைய உதவும். முன்னேற்றமும் இயற்கையும் எவ்வாறு கைகோர்த்துச் செல்ல முடியும் என்பதற்கு இந்தியா ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. இந்தியாவும் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது, நமது வனப்பகுதியும் அதிகரித்து வனவிலங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கத்தை பின்பற்றுவதன் மூலம் சிறந்த உலகத்தை உருவாக்குவோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:நிரவ் மோடியின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி