தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Arikkomban: 10 பேரைக் கொன்ற அரிக்கொம்பன்: கேரளாவில் செய்த சம்பவம் தெரியுமா? - mission arikomban

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதற்கு காரணமான ‘அரிசிகொம்பன்’ யானை, எங்கிருந்து இந்தப் பகுதிக்கு வந்தது என்பதை சற்று பின்னோக்கி தெரிந்து கொள்வோம்....

Mission 'Arikomban' successful, rogue elephant being shifted to Periyar Tiger Reserve
‘அரிகொம்பன்’ ஆபரேஷன் வெற்றி - முரட்டு யானை பெரியார் புலிகள் காப்பக பகுதிக்கு மாற்றம்!

By

Published : May 27, 2023, 8:01 PM IST

தேனி: மலையாள மொழியில் அரிசியை அரி என்று கூறுவார்கள். அந்த அரிசி எங்கெல்லாம் கிடைக்கும என மோப்பம் பிடித்து தவறாது சென்று தேடி உண்பவன்தான் இந்த அரிக்கொம்பன் என அழைக்கப்படும் அரிசிக் கொம்பன் யானை. ஒற்றை யானைகள் பொதுவாகவே தங்கள் கூட்டத்திலிருந்து தனித்து திரியும் இயல்புடையவை. மக்களின் வாழ்விடங்களை ஒட்டிய பகுதிகளில் வாழும் இது போன்ற யானைகள், குறிப்பிட்ட சுவையுடைய உணவுக்கு அடிமையாகிவிட்டால் அதற்காகவே மீண்டும், மீண்டும் மக்கள் வாழும் பகுதியை நோக்கி படையெடுக்கும்.

அந்த வகையில் அரிசிக்கு அடிமையான இந்த அரிக்கொம்பன், இதற்காக ரேசன்கடைகள், வீடுகளின் சமையல் கூடங்கள் என எதையும் விட்டு வைப்பதில்லை. தேவைப்பட்டால் 10 கிலோ அரிசிக்காக வீடுகளை இடிப்பதற்கும் இந்த கொம்பன் தயங்கியதில்லை. வலிய போய் யாரையும் தாக்கியதில்லை என்றாலும், இதன் பாதையில் குறுக்கிட்டால் உயிர்ப்பலி நிச்சயம்.

கேரளாவின் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தம்பாறை பகுதிகளில் கடந்த மூன்றாண்டுகளில் இந்த கொம்பனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10. பொதுவாகவே நள்ளிரவு முதல் அதிகாலை வரையிலான நேரம் தான் இவனது அரிசி வேட்டைக்கான நேரம். இந்நேரத்தில் வேலைக்குச் செல்லும் தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகள் தான் அரிக்கொம்பனின் கொம்புக்கு பலியாகினர்.

இந்த யானையை பிடிக்க கேரளாவில் போராட்டங்கள் நடைபெற்ற போதும், விலங்கு நல ஆர்வலர்கள் யானையின் தரப்பில் நின்றனர். விஷயம் உயர்நீதிமன்றம் வரை சென்றது. இதுகுறித்து ஆய்வு செய்ய, நிபுணர் குழுவை நீதிமன்றம் நியமித்த நிலையில், யானை, மனிதர்களுடன் மோதுவதற்கு வாய்ப்பில்லாத காட்டுப் பகுதியான பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்துக்கு மாற்ற அந்த குழு பரிந்துரை செய்தது. பரம்பிக்குளம் குடியிருப்புவாசிகள் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அங்கு போராட்டங்கள் வெடித்தன,. அப்போது உயர்நீதிமன்றம், கேரள அரசு விரும்பிய இடத்தில் யானையை விட வேண்டும் என்றும், அந்த இடத்தை ரகசியமாக வைக்குமாறும் கேட்டுக் கொண்டது.

மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் பிடிபட்ட யானை, தமிழ்நாடு - கேரள எல்லையான பெரியாறு புலிகள் வனக்காப்பக பகுதியில் விடப்பட்டது. மேலும் யானை நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கும் விதமாக யானையின் கழுத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டது. பின்னர் பெரியார் புலிகள் வனகாப்பகப் பகுதியிலிருந்து யானை தினமும் பல கிலோ மீட்டர் கடந்து இடம்பெயர்ந்து கொண்டே இருந்தது.

தேனி மாவட்டம் மேகமலை பகுதியில் உள்ள இரவங்கலாறு மணலாறு உள்ளிட்ட பகுதிகளில் உலா வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்து அப்பகுதியில் உள்ள கடைகளில் சென்று அரிசிகளை உண்பதும், மலைப்பாதை சாலைகளில் செல்லும் அரசு பேருந்துகளை வழிமறித்து அச்சுறுத்தும் நிகழ்வும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் தான் அரிக்கொம்பன் தற்போது தேனி மாவட்டத்தின் கம்பம் நகருக்குள் புகுந்துள்ளான். இவனை பாதுகாப்பாக பிடிக்க திட்டமிட்டுள்ள வனத்துறையினர், பொதுமக்கள் இடையூறு செய்யாமல் அமைதியாக இருந்தாலே போதும் என கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: அரிசி கொம்பனால் கம்பத்தில் 144 தடை... பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்ட 2 கும்கிகள்...

ABOUT THE AUTHOR

...view details