டெல்லி:அதிகரிக்கும் பணவீக்கம், வேலையின்மை, உழவர்களின் போராட்டம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட காரணிகளைப் பிரதானப்படுத்தி உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் தற்போதைய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளது. இத்தகவலை அக்கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஒருவர் கூறுகையில், காங்கிரஸ் தலைவர்கள், கட்சியின் தொண்டர்கள் ஆகஸ்ட் 9-10இல் பேரணி நடத்துகின்றனர் என்றார். அக்கட்சியின் தலைமை இது குறித்து கூறுகையில், காங்கிரஸ் தொண்டர்கள் மாநிலத்தில் உள்ள 403 தொகுதிகளிலும் பேரணி மேற்கொள்கின்றனர்.
பாஜகவே அரியணையை விட்டுவிடு!
மேலும், "இந்த பேரணியில் மாநிலத் தலைவர்கள் முதல் ஊராட்சிநிலை பொறுப்பாளர்கள் வரை வெவ்வேறு பொறுப்புகளில் உள்ளவர்கள் பங்கேற்கின்றனர். இந்த பேரணி வெற்றிபெறுவதற்காக 400-க்கும் மேற்பட்ட மூத்தத் தலைவர்கள் தங்களது பங்களிப்பைச் செலுத்துகின்றனர்.
அதேபோல், உறுதிசெய்யப்பட்ட சட்டப்பேரவை வேட்பாளர்களும் இதில் மிகத் தீவிரமாகச் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" எனவும் கட்சியின் தலைமை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 'பாஜகவே அரியணையை விட்டுவிடு' என்ற கருப்பொருளில் ஒவ்வொரு சட்டப்பேரவையின் முக்கியப் பகுதியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு பேரணி நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.