ஹைதராபாத் (தெலங்கானா):கனமழை காரணமாக சாலையில் சென்ற நபர் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
நீரில் தொலைந்த நபர் தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர் ரஜினிகாந்த் என்பது தெரியவந்தது. மணிகொண்டா பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடையில் இவர் தவறி விழுந்தார். சனிக்கிழமை (செப்., 25) பெய்த கனமழையால் சாலைகளில் நீர் குளத்தைப் போல தேங்கிக் கிடந்தது. சில இடங்களில் ஆறு போல நீரோட்டம் அதிகமாக இருந்தது.
இச்சூழலில், தன் வீட்டில் இருந்து சாலைக்கு வந்த ரஜினிகாந்த், சாலையில் நடந்து சென்றுள்ளார். அவர் வீட்டில் இருந்து 50 மீட்டர் தொலைவில் சென்றபோது, கழிவுநீர் கால்வாய் குழியில் தெரியாமல் கால் வைத்துள்ளார்.
நீரோட்டம் அதிகமாக இருந்ததால், அவர் கழிவுநீர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டார். அவரைத் தேடும் பணியில், பேரிடர் மீட்பு குழுவினரும், தீயணைப்புத் துறையினரும், காவல் துறையினரும் ஈடுபட்டுவந்தனர்.