கான்பூர்:உத்திரப் பிரதேசம் மாநிலம், கான்பூர் அருகே 17 வயது பள்ளி மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, உயிரிழந்த மாணவர் குஷாக்ரா கனோடியாவை அவரது டியூசன் ஆசிரியையின் காதலன் கொலை செய்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தனியார் ஜவுளி கடை தொழிலதிபரின் மகன் குஷாக்ரா கனோடியா தினமும் ரச்சித்தா என்பவரிடம் டியூசன் சென்று வந்த நிலையில், 2023, அக்.30 அன்று டியூசனுக்கு சென்ற தங்களது மகனை காணவில்லை என பல இடங்களில் தேடிவந்தனர். இதனிடையே மாணவரை கொலை செய்த விவகாரம் தொடர்பாக, டியூசன் ஆசிரியையும் அவரது காதலன் பிரபாத் சுக்லாக் ஆகிய இருவரை போலீசார் இன்று (அக்.31) கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், மாணவரை கொலை செய்ததை மறைப்பதற்காகவும், இதனை திசை திருப்புவதற்காகவும் "அல்லாஹ் அக்பர்" என எழுதிய கடிதம் ஒன்றை மாணவனின் குடும்பத்தினருக்கு அனுப்பியதாகவும் தெரியவருகிறது. மேலும் அக்கடிதத்தில், 'தங்களது மகனை கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ.30 லட்சம் தந்தால் மட்டுமே அவனை விடுதலை செய்வோம்' எனவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிசிபி பிரமோத் குமார், 'மாணவர் குஷாக்ரா கனோடியா நேற்று மாலை 4:00 மணியளவில் ரச்சித்தா என்பவரிடம் டியூசனுக்காக சென்றதாகவும் ஆனால், மாணவர் வீடு திரும்பவில்லை எனவும் கூறினார். மாறாக, மாணவனின் வீட்டிற்கு அவனை ரூ.30 லட்சம் கொடுத்தால் மட்டுமே விடுதலை செய்வோம் எனவும்; அதில், "அல்லாஹ் அக்பர்" என போலீசாரை திசை திருப்புதற்காக எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. மேலும், டியூசன் ஆசிரியை ரச்சித்தாவும் பிரபாத்தும் காதலித்து வந்ததாக சந்தேகம் இருப்பதாகவும்; இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும்' தெரிவித்தார்.
மேலும், மாணவர் குஷாக்ரா கனோடியாவை இதற்காக 3 நாட்களாக பின் தொடர்ந்து வந்ததாகவும், டியூசனுக்காக ஜரீப் சௌகி என்ற பகுதியில் சந்தித்த போது, அவரை டியூசனுக்கு கொண்டு போய் விடுவதாக முன்வந்துள்ளார். இதையடுத்து, பிரபாத் தனது வீட்டுக்கு இரவு 7:00 மணியளவில் அழைத்து சென்றதோடு, அங்கு மயக்கம் மாத்திரை கலந்த காபியை குடிக்க வைத்துள்ளார். பின்னர், மயக்கமடைந்த மாணவரை கயிறால் கழுத்தால் இறுக்கி கொலை செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, 8;00 மணியளவில் பிரபாத்தும் அவரது நண்பர் சிவாவும் இணைந்து உடலை ஃபசல்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் கொண்டுப் போய் வீசியுள்ளனர். இந்த நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பிரபாத்தையும், அவரது காதலியான டியூசன் ஆசிரியையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? மாணவரை கொலை செய்ததற்கான காரணம்? என்பன குறித்து தீவிர விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:கணவனுக்கு தெரியாமல் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்.. வீட்டுக்குள் நுழைந்த இளைஞரால் நேர்ந்த விபரீதம்..