டெல்லி : இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது பாலியல் புகார் அளித்த சிறுமி தன் புகாரை திரும்பப் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் பதவி விலகக் கோரியும், அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பிரிஜ் பூஷன் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாக மைனர் வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் புகார் அளித்தனர். மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லி காவல் துறை அண்மையில் பிரிஜ் பூஷன் சிங் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்த அறிக்கையை வெளியிட்டது.
பிரிஜ் பூஷன் சிங் மீது 2 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளததாகவும்,10 புகார்களும் பெறப்பட்டதாகவும் டெல்லி காவல் துறை தெரிவித்தது. பாலியல் புகார் அளித்தவர்களில் ஒருவர் மைனர் பெண் என்பதால் பிரிஜ் பூஷன் சிங் மீது டெல்லி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர்.
மற்ற 6 வீராங்கனைகள் அளித்த புகாரில் பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், புகார் அளித்த 7 வீராங்கனைகளில் மைனர் வீராங்கனை தனது புகாரை வாபஸ் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரிஜ் புஷன் சிங் மீது கொடுத்த பாலியல் புகார் வீராங்கனை திரும்பப் பெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது புகார் அளித்த சிறுமி, மைனர் இல்லை என்றும் போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து புகாரை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது. போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மைனர் சிறுமி இல்லை என்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து அந்த பெண் புகாரை திரும்பப் பெற்றதாகவும், இருப்பினும் நீதிபதி முன்னிலையில் பெண் வாக்குமூலம் அளித்த நிலையில், புகார் மனு திரும்பப் பெற அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பாலியல் புகார் விவகாரத்தில் மல்யுத்த வீரார், வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரிஜ் பூஷன் சிங் மீது கைது நடவடிக்கை எடுக்கக் கோரி விரைவில் மகா பஞ்சாயத்து நடத்த உள்ளதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா தெரிவித்து உள்ளார். மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவாக விவசாய சங்கங்கள், குழுக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க :Odisha train accident: டிக்கெட் இல்லாத பயணிகளுக்கும் நிவாரண உதவி - ரயில்வே அதிகாரிகள் தகவல்!