டெல்லி :நண்பரின் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் அரசு அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இது தொடர்பாக மாலைக்குள் அறிக்கை அளிக்குமாறு தலைமை செயல் அதிகாரிக்கு உத்தரவிட்டு உள்ளார்.
வடக்கு டெல்லியின் புராரியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது தந்தையை இழந்து உள்ளார். இதனால், அம்மாணவி மன உளைச்சலில் இருந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து, அம்மாணவி தேவாலயம் ஒன்றில் வைத்து டெல்லி அரசு அதிகாரியைச் சந்தித்து உள்ளார்.
மேலும், அந்த மாணவி அந்த அரசு அதிகாரியின் நண்பரின் மகள் என்பதும் தெரிய வந்து உள்ளது. இதனைத் தொடர்ந்து, மாணவிக்கு ஆறுதல் கூறுவதாகத் தெரிவித்து 2020 முதல் 2021 வரை பல முறை அம்மாணவியை அரசு அதிகாரி பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த செயலுக்கு அரசு அதிகாரியின் மனைவியும் உதவியதாக தெரிகிறது.
அது மட்டுமல்லாமல், தனது கணவரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கர்ப்பமான மாணவிக்கு மாத்திரைகளை கொடுத்து கர்ப்பத்தை கலைக்கவும் அவரது மனைவி பக்க பலமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், டெல்லி மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் மீது காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
மேலும், அரசு அதிகாரியின் இந்த செயலுக்கு உதவிகரமாக செயல்பட்டதாக அவரது மனைவி மீதும் 120 பி (கிரிமினல் சதி) என்ற பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இந்த நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ள அரசு அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார்.
மேலும், இது தொடர்பாக இன்று (ஆகஸ்ட் 21) மாலை 5 மணிக்குள் அறிக்கை சமர்பிக்குமாறு டெல்லி மாநில தலைமைச் செயலாளருக்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என டெல்லி மகளிர் ஆணையம், அம்மாநில காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேலும், இது தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால் (Swati Maliwal) வெளியிட்டு உள்ள 'X' (ட்விட்டர்) வலைதளப் பதிவில், "டெல்லி மாநில அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறையின் இயக்குநராக இருக்கும் ஒருவர், ஒரு பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளார்.
இதுவரையில், அவரை காவல் துறையினர் கைது செய்யவில்லை. ஒரு பெண் குழந்தையைக் காப்பாற்ற வேண்டிய வேலையை செய்து வரும் ஒருவர், இந்த கொடூர செயலை செய்து உள்ளார் என்றால், மற்ற பெண் குழந்தைகள் எங்கு செல்வார்கள்? குற்றம் சாட்டப்பட்டவர் கட்டாயமாக விரைவில் கைது செய்யப்பட வேண்டும்" என தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க:பள்ளி சிறுமி பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை - அதிகாரி மீது போக்சோ வழக்கு!