டெல்லி: தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் பயணமாக பிப்.27ஆம் தேதி டெல்லி சென்றார். அங்கு தமிழ்நாடு இல்லத்தில் பல்வேறு அதிகாரிகளை சந்தித்தார். இதனிடையே தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநரும், பஞ்சாப் மாநில ஆளுநருமான பன்வாரிலால் புரோகித்தின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து நேற்று (பிப். 28) மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்தித்தார். அப்போது அவர் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் திறன் மேம்பாடு மற்றூம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேம்பாட்டு திட்டங்களுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் மானியங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், அவருக்கு சதுரங்க விளையாட்டு தொடர்பான புத்தகம் ஒன்றையும், திருவள்ளூவரின் சிறு சிலை ஒன்றையும் அன்பளிப்பாக அளித்தார். இந்த சந்திப்பின் போது, மோடியின் தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்ததாகவும், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நலன் குறித்து பிரதமர் விசாரித்ததாகவும், தமிழ்நாடு விளையாட்டுத் துறையில் எடுக்கப்படும் முன்னெடுப்புகள் குறித்தும் பிரதமர் கேட்டறிந்தாதாகவும் அமைச்சர் உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை குறித்தும், இளைஞர்களுக்கு கேலோ இந்தியா தமிழ்நாட்டில் நடத்துவது, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது, தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாகவும், அதனை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்தார் என்றும் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: ஈரோடு இடைத்தேர்தலில் 75 சதவீதம் வாக்குப்பதிவு:யாருக்கு சாதகம்..?