புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை கருத்தரங்க அறையில் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று (டிசம்பர் 19) கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், “புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, மற்றும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் ஆகியோர் மாநில அந்தஸ்து விவகாரத்தில் பொங்கி எழுகிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை.
முதலமைச்சர் ரங்கசாமி 2011ஆம் ஆண்டில் கட்சி தொடங்கிய போது மாநில அந்தஸ்து என்ற ஒற்றை கோரிக்கையாக வைத்து கட்சி தொடங்கி தான் ஆட்சி அமைத்தார். அதற்குப் பின் ஏற்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும், நிதி கமிஷனில் புதுச்சேரியை இணைக்க வேண்டும், மாநில கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து தான் ரங்கசாமி கூட்டணியில் இணைந்தோம்.
கடந்த ஆட்சியில் மாநில அந்தஸ்து வேண்டுமென்று போராடியது இல்லை. அதற்கு மாறாக அவர்கள் அமைச்சரவைக்கு அதிகாரம் வேண்டும் என்று தான் போராடினார்கள். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற கடந்த ஆட்சியில் ஏதாவது ஒரு முயற்சி எடுக்கப்பட்டதா?. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என்ற ரங்கசாமியின் நல்ல முயற்சியை கொச்சைப்படுத்த வேண்டாம். ஒருமித்த கருத்து இருந்தால் தங்களுடன் இணைந்து போராடலாம். அப்படி இல்லை என்றால் ஒதுங்கிக் கொள்ளலாம்” என கூறினார்.