புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, மக்கள் நலத்திட்ட கோப்புகள் தொடர்பாக துணைநிலை ஆளுநர் அழைப்பிற்காக இன்று பத்தாம் நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். மேலும் இன்று ஆளுநரை சந்திக்கப் போவதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் ஆளுநர் கிரண்பேடி இன்றும் அவருக்கு அனுமதி வழங்கவில்லை. மேலும், துறை சம்பந்தப்பட்ட கோப்புக்கள் தொடர்பாக துறைச் செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரை சந்திக்கவும் அறிவுறுத்திருந்தார்.
ஆனால், அதனை ஏற்க மறுத்த அமைச்சர் கந்தசாமி, திடீரென ஆளுநர் மாளிகை முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தனது துறை சார்ந்த 36 கோப்புகள் சம்பந்தமாக சந்திக்க ஆளுநர் எனக்கு அனுமதி அளிக்கவில்லை. அவர் அனுமதி அளிக்கும் வரை எனது போராட்டம் ஆளுநர் மாளிகை முன்பாகவே தொடரும். இது தொடர்பாக குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.